"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 2


"அரியது கேட்கின்"



2. வாசனை

இருள் கவிழ்ந்திருந்தது. யார் இறந்தாலும் யார் பிறந்தாலும் இரவும் பகலும் வந்துகொண்டுதானிருக்கிறது. எத்தனை கோடி வாழ்வையும், எத்தனை கோடி சாவையும் கண்ணுற்றாலும்,  நித்தியத்துவமாய், வரலாற்றின் ஒரு நிரந்தர சாட்சியாய் காலம் மட்டுமே நிற்கிறது. காலத்திடமிருந்தே சகலமும் தோன்றுகிறது. காலமே சகலத்தையும் தோற்றுவிக்கிறது. கடைசியில் காலத்திடமே சகலமும் வந்து முடிகிறது. காலமே சகலமும், சகலமுமான கடவுளும். கடவுளை நம்புவோர்க்கு காலமே கடவுள். காலத்தை நம்புவோர்க்கு கடவுளே காலம்.


காலந்தான் கடவுளைக்கூட நிர்ணயிக்கிறது இல்லையா ? கடவுள் வாழ்ந்த காலம் தான் மனுதர்மத்தின் வழிகாட்டுதலாகிறது, அவர்களின் தீர்க தரிசனங்கள்  தர்மங்களாகிறது. அவர்தம் கொள்கைகள் பின்பற்றப்பட்டு சமயமாகிறது. வழிபாட்டு முறைகள் மதங்களாகிறது. காலத்தின் உரைக்கல்லாய் வாழ்ந்துமுடித்த ஒருமனிதன் கடவுளென்றே உறைகிறான். மாலைகள் சூட்டப்பட்ட ஒரு கடவுளைப்போல் உறைந்திருந்தார் சக்திவேல்.


சக்திவேலின் இரண்டாவதுமகள் சரண்யா கணவர் மணிகண்டன், குழந்தை நந்தினியோடு வந்திறங்கினாள். சற்று நேரத்தில் அவரது அண்ணன் நடராசன் குடும்பத்தோடு வந்து நின்றார். ஏறத்தாழ எல்லா உறவினர்களும் வந்திருந்தனர். 


மயங்கி கீழே விழுந்ததில் அடிபட்ட துர்கா அருகிலிருந்த இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். நதியாவும் உறவினர் சிலரும் அவளோடு மருத்துவமனையில் நின்றிருந்தனர்.

கணவர் இறந்தது ஒருபுறம், துர்காவுக்கு அடிபட்டது  மறுபுறம் தீப்புண்ணில் தேனீக்கள் கொட்டியதாய் இருபக்க வலியில், கைகளை வேகமாக தரையில் அடித்தும், தலையை தரையில் அறைந்த்தும் ஓலமிட்டாள் வேம்பரசி. துக்கமும் துயரமும்  இருளாய் சூழ்ந்திருந்தது அந்த இரவு. 


சரண்யாவின் ஒன்றரை வயதுக் குழந்தை நந்தினி காம்பவுண்ட் சுவற்றில் பந்தை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.   

மருத்துவமனையில் துர்காவை சேர்த்துவிட்டு சந்தோஷ் அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தான். துர்காவின் நலம் பற்றி விசாரித்த வேம்பரசியிடம் 


"ம்ம்.. இன்னும் கண்ணு முழிச்சி பாக்கல, மயக்கமாத்தான் இருக்கா. நார்மலாதான் இருக்குறான்னு செக்கப் பண்ண டாகடர் சொன்னாரு, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததுல எலும்பு முறிவு, மாவுக்கட்டு போட கூட்டிப்போறாங்க, சித்தியையும் மாமாவையும் அங்க இருக்க சொல்லிட்டு சாப்பாடு வாங்கி கொடுத்திட்டு நான் வந்திட்டேன். ஒன்னும் ஆகாது, கவலை படமா இரும்மா" என்றான்.

"நல்லா இருந்த மனுசனை சாகக்கொடுத்திட்டு, புள்ளைய பக்கத்துல இருந்து கவனிக்கக் கூட முடியாம நான் இருக்கேன், என்ன நீ கவலை படாம இருக்க சொல்லுற.?   , கவலை படாம இருக்க முடியுமா..? கடவுளே.. கவலை படாம இருக்க முடியுமா.???" என்று வான்நோக்கி முழங்கி நெஞ்சில் அறைந்துகொண்டாள் வேம்பரசி.


~~



நடராசன் தள்ளாட்டத்தோடு சந்தோஷின் அருகில் வந்தார். மதுவின் நீச்ச வாசனை அவரிடமிருந்து வீசியது, "டேய், இப்படி ஓட்டும் உறவும் இல்லாத எடத்துல என் தம்பிய அனாத மாதிரி கெடத்திருக்கியடா, கொஞ்சமாச்சும் வெவரம் வேணாமா.? உனக்கு விசயம் தெரிஞ்சதும் நேரா காட்பாடிக்கில்லாடா தூக்கிட்டு வந்துருக்கணும், அங்க எப்படி வாழ்ந்த பய, நம்ம ஜாதிசனம் ஊர்மக்க எல்லாரும் இருக்க, தூக்க ஒரு நாதி இல்லாம கடையில வேல பாக்கற பசங்க கொண்டாந்து போட்ருக்கானுக அங்க நம்ப வீட்ல வச்சி அடக்கம் பண்ணாதான இன்னும் பத்து நாள் சாமிகும்பிட வசதியா இருக்கும். யோசன வேண்டாமாடா ?" என நடராசன் திட்டும் போது இடைமறித்தாள் நடராசன் மனைவி வள்ளியம்மை

"சந்தோசு நீ போடாப்பா, இவருக்கு குடிசிட்டு வந்தா தான் ஞானம் பொங்கும். எந்த எடத்துல இருந்து என்ன பேசணும் வெவரம் கூட கெடையாது. வேலைக்காரங்களா இருந்தாலும் அண்ணன்ன்னு அக்கறையோட நின்னு எல்லாம் பண்ணிருக்கானுக, இந்த சின்ன பையனுக்குத்தான்  என்ன தெரியும், யோசிக்க ஒரு அவகாசம் வேணாமா. நடுவீட்டுல இறந்தவரை வச்சிருக்கு, பெரியவள ஆஸ்ப்பத்திரியில சேத்திருக்கு, அவள வீட்டுக்கு அனுப்ப இன்னும் பத்து பதினஞ்சு நாளாகும்ன்னு டாக்டர் சொல்லிட்டாரு. இங்க ஒரு ஆளும், அங்க ஒரு ஆளும் இருந்து பண்டுவம் பாக்கமுடியுமா.? இங்கயே அடக்கம் பண்றதுக்கு ஆவுற காரியத்தை பாருங்க" என்று இருவரையும் நகர்த்திவிட்டு "ஏய் கண்ணுங்களா இப்படி அழுதுட்டே இருந்தா என்னத்துக்கு ஆவுறது.? கடையில இருந்து நாலு இட்டிலிய வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து தூங்கவைங்க.. போங்க" என்று கர கரக்குரலில் கத்தி அந்த சபையைக் கலைத்து நகர்ந்தாள் வள்ளியம்மை.


இறப்பு வீட்டில் ஒலிக்கும் இந்த கரகரக்குரல் தான் நிகழ்தலின் பிரக்ஞையற்று தவிக்கும் மனதை நிகழ்காலத்திற்குள் உந்தித் தள்ளுகிறது. வாழ்தலுக்கான காரணங்களையும் நம்பிக்கையும் மீட்டுத்தருவதும் இக் கரகரக்குரல் தான்.


நகர்ந்து சென்ற சந்தோஷின் கரங்களை பிடித்து, "என் புள்ள எப்படி இருக்காடா.? கண்ணு முழிச்சாளா.?   இனி நீதான் அவளுக்கு அப்பனா இருந்து பாத்துக்கணும். நானும் பாத்துப்பேன், உங்க அம்மாவும் பாத்துப்பா. ஆனா, எங்க காலத்துக்கு அப்பறமா நீதான் பாத்துக்கணும். ஏன்னா நானும், உங்க அம்மாவும்  போனதுக்கப்பறம் அந்த புள்ள ஒரு ஆறுதலுக்கு கூட சரண்யா வீட்டுப்பக்கமோ வேற யார் வீட்டுக்குமோ  போகமுடியாது, போகவும் நீ விட்டுடக் கூடாது. யாரும் ஒருவார்த்தை சொல்லிடாத அளவுக்கு நீ திடமா நடந்துக்கணும், எல்லாத்துக்கும் மேல இருந்து உங்க அப்பா உன்ன வழிநடத்துறார்ன்னு நெனச்சுக்க" என்று வழவழப்பாய் நாவில் உறிக்கொண்டிருந்த எச்சிலை காறி உமிழ்ந்து நின்றார் 
நடராசன்
அவரின் சிகப்பான போதை ஏறிய கண்களில் கடவுளும் கருணையும் குடியிருந்தது.

"சரிங்க, பெரியப்பா.. கண்டிப்பா எங்க அக்காவுக்கு ஒரு குறையும் இல்லாம எங்க அப்பா இருந்து பாத்துக்கிட்ட மாதிரி நான் பாத்துக்கறேன்.  நீங்க போயி கொஞ்ச நேரம் தூங்குங்க" என்று கூறி சந்தோஷ் நகர்ந்தபோது, மீண்டும் அவன் கைகளை பிடித்து நிறுத்தி.  "ஏண்டா ஓடுற ? போதையில ஒளறுறான்னு  நெனச்சியோ? இரு" என வீதியில் கிடந்த பெஞ்சில் சந்தோசை அமரவைத்து, தானும் அமர்ந்தார்.

"இதெல்லாம் உங்கிட்ட  சொல்லறத்துக்குள்ள உறுத்து எங்கிட்டருக்கு, ஏன்னா நீ எனக்கு எப்படியோ, உங்க அப்பனும் எனக்கு அப்படித்தான். எனக்கு கூட பொறந்தது மொத்தம் இரண்டுபேரு, எனக்கு இளையதா ஒரு பொண்ணு இரண்டு வயசுல பாம்புக்கடிச்சி செத்துப்போச்சி, மூணாவதா உங்க அப்பன். எங்க அப்பா ஒரு சிவபக்தன் எனக்கு நடராசன் உன்னும் உங்க அப்பனுக்கு சக்திவேலுன்னும் பெரு வச்சவரு, அண்ணாமலை கிரிவலம் போயி பஸ்ஸு ஆக்கிசிடெண்ட்ல செத்து சிவன்கிட்டயே போயிட்டாரு.


எங்க அப்பன் சாவும்போது எனக்கு பதினாலு வயசு, உங்க அப்பனுக்கு அஞ்சு வயசு. இருந்த ஒரு காணி நெலத்தையும் குத்தகைக்குவிட்டுட்டு எங்க அம்மாவும் நானும் தறி போடுவோம். உங்க அப்பன படி படின்னு எவ்வளவோ வெரட்டினோம். ஆனாலும் ஆறாப்பு மேல படிப்பு மண்டைக்கு ஏறல. ஏங்கூட தறிஅடிக்க வந்துட்டான். அந்த சின்ன வயசுல பெரிய ஆள் ஏறி நின்னு அடிக்க கூடிய தறிய ஒத்த ஆளா மிதிப்பான். எவ்வளவு பெரிய முட்டையானாலும்  தனியா நின்னு தூக்கிடுவான். எங்கம்மா செத்ததுக்கு அப்புறம் நா முன்ன நின்னு உங்க அப்பனுக்கு கல்யாணம் பண்ணிவைச்சேன், அதுக்கு அப்புறம் தான் தனிவீடு தனிவாசல். கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்ட்டப்படும்போது  தான் படிக்கலையேன்னு யோசிச்சான்.  அந்த வயசுல அவன் பட்ட கஷ்ட்டத்தை நீங்க படக்கூடாதுன்னுதான் அவ்வளவு கடன் வாங்கி உங்கள படிக்க வச்சிருக்கான்.  நா இருந்து வளர்த்த பய, நான் பார்த்து வளர்ந்த பய, எனக்கு முன்னாடி போயிட்டான்" . என்று தன் தலையில் அடித்துக்கொண்டார். வீட்டிலும் வீதியிலும் அழுகை அணைந்து அமைதியாய் இருந்தது. இறந்தவரை சுற்றி ஒருசிலர் விழித்திருக்க, முற்றத்தில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.  



~~



துர்கா கண்விழித்து பார்த்தபோது ஒரு நாள் கடந்திருந்தது. அவள் இடது கை நரம்பில் குளுக்கோஸ் டியூப் செருகப்பட்டு, கட்டிலின் பக்கவாட்டில் பாதி நிரம்பிய மூத்திரப்பை தொங்கிக்கொண்டிருந்தது. இடப்புறம் பச்சை நிற திரைச்சீலையால் மூடப்பட்டிருந்த செவ்வக வடிவ அறையில், திரைச்சீலைக்கு பின் கிடந்த பெஞ்சில் யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. முணக்கமான ஒரு குரல் கொடுத்தாள் துர்கா. அண்மையில் யாருமில்லை. பின் மெதுவாக  வலதுகை மூட்டை கட்டிலில் அழுத்தி படுக்கையிலிருந்து எழப்பார்த்தாள். முடிவதாய் தோன்றவில்லை. நடுமுதுகில் பூரான் ஊர்வதாய் ஒரு குறுகுறுப்பு,  புரண்டு படுக்கவோ எழுந்து அமரவோ அவளால் இயலவில்லை. வலதுகையை நீட்டி கைகளால் கால்களை நகர்த்த முயற்சித்தாள். இடக்காலில் பெரிய உருளைப்போல் மாவுக்கட்டுப் போடப்பட்டிருந்தது. வலதுகால் அசையாதவாறு கிளிப் செய்யப்பட்டிருந்தது. 

வாழைத்தண்டுபோல் மெல்லிய மென்மையான கால்களை கைகளால் நகர்த்தப்பார்த்தாள். அது கனம் கூடி கல்லாய் அசைவற்று இருந்தது. அவள் உணர்வற்ற கால்கள் உயிறற்றுப் போயிருந்தது. தன் இயலாமையை முணங்கலாக்கி "இம்ம்" என்று உருமினாள். விரல்களை மடக்கி முஷ்டியாக்கி நெற்றியில் இருமுறை அறைந்து கொண்டாள். இருபுருவங்களுக்கு மத்தியில் விண்ணென்று வலித்தது. 

கன்னங்களையும் கழுத்தையும் தொட்டு தன்னைத் தானே பரிசோதித்துக் கொண்டாள். கழுத்திலிருந்த செயின் கழற்றப்பட்டிருந்தது. சுடிதாரணிந்து மூர்சையானவள் நைட்டிக்கு மாற்றப்பட்டிருந்தாள். ஏதோ ஞாபகம் வந்தவளாய் கைக்கெட்டும் மட்டும் கால்களைத் தடவிப்பார்த்தாள். கால்களில் ஹாலிப்பர் கம்பிகள் கழற்றப்பட்டிருந்தது.

"யார் கழற்றியிருப்பார் என் கால்களில் அணிந்திருந்த ஹாலிப்பர் கம்பிகளை ? யார் என் உடைகளை என் அனுமதியின்றி உருவி இன்னோர் உடைக்குள் கூடு பாய்த்திருப்பார் ? என் பதின்ம வயதிலிருந்து நான் மட்டுமே தரிசித்த என் நிர்வாணத்தை யார் கண்டிருப்பார்.?" கண்களை இறுக மூடி ஒரு தவ நிலையில் தனக்குத்தானே பேசிக்கொண்டாள். 

உடைமாற்றும் அறைக்குள் யாரையும் அனுமதியாதவள். விடுதியில் இருந்த இரண்டு வருடங்களில் தூங்கும் போது கூட தனது மெல்லிய போலியோ கால்களை போர்வைக்குள் பொட்டலம் போல் பொதிந்துதான் உறங்குவாள். உறக்கத்தின் போதும்  அடிக்கடி விழித்து கால்கள்மேல் போர்வையை பரப்பி அதன்பிறகே தூங்குவாள். கால்களிலிருந்து ஹாலிப்பர்களை கழற்றும்போதும் ஏதாவதொரு போர்வையோ டவலையோ விரித்து மறைத்துக் கொள்வாள்.

ஹாலிப்பர்களை மாட்டுவதும் கழற்றுவதும் அத்தனை சுலபமல்ல, பிளந்த மூங்கிலைப்போல இருக்கும் ஒன்றரை ஜான்நீள பிளாஸ்டிக் பட்டையின் அரைவட்ட விளிம்பை தொடைகளின் பின்பகுதியில் நுழைக்கவேண்டும். ஒரு காலுறையை நீளவாட்டில் கத்தரித்தது போலிருக்கும் மற்றுமொரு பிளாஸ்டிக் பட்டையை பாதங்களில் பதித்து பின்னங்காலில் நுழைக்க
வேண்டும். தொடைபகுதியிலிருக்கும் பிளாஸ்டிக் பட்டையையும் பின்னங்காலின் குதிரைமுகச் சதைவரை உயர்ந்திருக்கும் பிளாஸ்டிக் பட்டையையும் இணைக்கும் அலுமினிய பட்டை முட்டு மடங்கும் இடத்தில் காடி(lock) போல் அமைந்திருக்கும். கால்களைவிட்டு கழன்றுவிடாதிருக்க தொடையில் ஒரு பெல்ட்டும் கணுக்காலருகே ஒரு பெல்ட்டும் முட்டியை நீட்டவும் மடக்கவும் பயன்படும் காடி(Lock) க்கு மத்தியில் ரப்பரிலான மூட்டுப்பட்டையும் இருக்கும். அணிந்திருக்கும் சுடிதாரை அவிழ்த்தால் தான் இத்தனையும் கழற்றி ஹாலிப்பரிலிருந்து கால்களை விடுவிக்க முடியும்.

 "யார் கழற்றியிருப்பார்" என்ற கேள்வி இறந்துபோன அப்பாவின் நினைவுகளைத்தாண்டியும் வளர்ந்துகொண்டிருந்தது அது விநோதமாகவும் வேதனையாகவும் இருந்தது அவளுக்கு.


~~

அந்த அறையின் பிரகாசமான வெளிச்சம் அச்சமூட்டுவதாயும், பாதுகாப்பின்மையையைத் தருவாதாயும் கண்களைக் கூசச் செய்தது. முன்கைகளை மடக்கி கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தாள் துர்கா. கண்ணிமைகளுக்கும் கைகளின் சதைகளுக்குள்ளும் பிசுபிசுத்தது நிறமற்ற திரவம். 

சற்று நேரத்தில் துர்காவின் சித்தி எழிலரசியும் சந்தோஷும் அறைக்குள் நுழைந்தனர். விழித்திருந்த துர்காவைப் பார்த்து ஆனந்தம் பாதியும் அழுகை பாதியுமாய் அருகில் வந்தாள் எழிலரசி.

"எம் புள்ளைய அனாதையா விட்டுட்டு போய்ட்டாரே, ஆசையா வளத்த புள்ளைக்கிட்ட ஒரு வார்த்த சொல்லாமக் கூட போயிட்டாரே, கடைசியாக் கூட அந்த மொகத்த பார்க்காம எம்புள்ள என்ன வேதனை பட்டிருக்கும்" என்று துர்காவின் கன்னத்தோடு கன்னம் சேர்த்து அழுதாள். 

அழுகை மனிதனின் முதல் உணர்ச்சி, 
அழுகை தற்காலிக ஆறுதல், 
கண்ணீர் துக்கம் கரைக்கும் அமிலம்.

ஆறுதலுக்காகவே பெருத்துப் போயிருந்த சோகத்தை, ஊசியால் பலூனைக் குத்தி உடைத்ததைப் போல் வெடித்தளுதாள் துர்கா.

எழிலரசி, துர்காவின் கலைந்திருந்த துணிகளை சரிசெய்த போது, துர்கா சந்தோஷை உற்று நோக்கினாள். சந்தோஷ் அவள் பார்வையைத் தவிர்த்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான். 

இதுவரை பார்த்தவன் போலில்லை, சந்தோஷ் புதியவனாய் தெரிந்தான் துர்காவுக்கு. ஆஜானுபாகுவாய் புடைப்பான கைகள் வெளியே தெரியும்படியான இறுக்கமான டீ.சர்ட் அணியாமல் தொள தொளவென இருக்கும் சட்டையை அணிந்திருந்தான். இறுக்கமான தசைகள் ஒரே நாளில் தளர்ந்து, மாநிற தேகம் இன்னும் கறுத்து, ட்ரிம் செய்த தாடி, கிருதாவோடு இணையும் முறுக்கிய மீசை, தூக்கிவாரி சீவப்பட்ட தலைமுடி என அவனுக்கே உரித்தான எவ்வித அடையாளமுமின்றி மழித்த தலையோடு தரையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சந்தோஷைப் பார்த்து அழுவதுபோல உதட்டைச் சுழித்து, "அம்மா..., அப்பா" என்றாள் துர்கா. வேறெதுவும் கேட்பதற்கில்லை அவனிடம் அவள். 

"ஊருக்கு கொண்டுபோறதாதான் இருந்திச்சு, உன்ன ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அங்கயும் இங்கயும் அலைய முடியாதுன்னு இங்கயே முடிச்சிட்டோம். டெத் சர்ட்டிபிகேட் வாங்கி 2200 ரூபா பணத்த கொடுத்து போரூர் மின்சார சுடுகாட்டுல பன்னிரெண்டு மணிக்கா கொண்டு போனோம். அம்மாவ பதினாறு நாள் வெளிய போக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. சித்தி நீங்க அக்காகூட இருந்து பாத்துக்கோங்க." என்று எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல், ஒரு உரைநடையை ஒப்புவிப்பது போல இருவருக்குமாய் பொத்தாம் பொதுவாய் ஒரு பதில் கூறினான். 


~~

சந்தோஷ் விடைபெறும் நேரத்தில் நதியா அறைக்குள் நுழைந்தாள். 

தந்தையிடம் பகிரமுடியாத கனவுகளை, தாயிடம் கூற முடியாத விருப்பங்களை, தங்கையிடம் சொல்லமுடியாத ஆசைகளை, காதலனிடத்தும் வேண்டமுடியாத ரகஸியங்களை தோழியிடம் தானே பெறமுடியும். 

படுக்கையில் வந்தமர்ந்த நதியாவின் தொடைகள் துர்காவின் கண்ணீரை ஆவியாகும் வெதுமை பெற்றிருந்தது. இன்னும் கண்திறவாத பூனைக்குட்டியைப்போல புரள ஆரம்பித்திருந்தாள் துர்கா. துர்காவின் தலையைக்கோதி " ஸாரி, துர்கா நேத்து நைட் உங்கூட ஸ்ட்டே பண்ண முடியல, பாப்பா ஒரே அழுகை மாமியால சமாளிக்கமுடியாம கூப்டதால வீட்டுக்கு போயிட்டேன். மதியம்தான் அடக்கம் பண்றாங்கன்னு சொன்னதால மகேஷ லீவ் போடசொல்லி அவரையும் கூட்டிட்டு வந்தேன். நம்ம டீம்ல இருந்து ஏழுபேர், ஹெச்.ஆர் மேடம், டிபார்ட்மெண்ட் மேனேஜர், எல்லாரும் வந்திருந்தாங்க. அம்மாவ பாத்து ஆறுதல் சொல்லிட்டு, உன்னையும் பாத்துட்டு போனாங்க. நீ அப்போ தூக்கத்துல இருந்த. ஒரு நிமிஷம் இரு, வெளியில மகேஷ் பாப்பவ வச்சிட்டு இருக்காரு அழைச்சிட்டு வறேன்". என்று வெளியே சென்று கணவரையும் குழந்தையையும் அழைத்து வந்தாள் நதியா.

ஆறுமாத கைக்குழந்த ரக்‌ஷிதா துர்காவின் கைகளுக்குள் இருந்து சோம்பல் முறிப்பதாய் கைகளை நீட்டி மடக்கியது. முழுதாய் திறக்காத அதன் கண்கள் கடல் சிப்பிபோல் குவிந்திருந்தது. அல்லிமொட்டு போலான மென்கரங்களால் துர்காவின் மார்பில் இடித்தது. அக்குள் இடைவெளியில் ஆட்காட்டி விரலால் மெல்லமாக அழுத்த உதட்டைச் சுழித்து ஒருபக்கப் பிறை நிலவாய் சிரித்தது. நெருப்பு மட்டுந்தான் தான் கொண்ட அனைத்தையும் தன்போலாக்கும். குழந்தையும் அதுபோல. குழந்தையை ஏந்திய குழந்தைபோலிருந்தாள் துர்கா.

"பேஷியண்ட் முழிச்சிட்டாங்கன்னா சொல்லமாட்டீங்களாம்மா.? டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம். பேஷியண்ட் கூட அட்டெண்டர் ஒருத்தர் மட்டும் இருங்க. இத்தன பேர் இருந்தா திட்டுவாரு, கெளம்புங்க." என்று கண்டிப்பான குரலில்  அதட்டினாள் பணிநேர செவிலி. 

குளுக்கோஸ் இறங்கிக் கொண்டிருந்த டியூப்பை உருவி,  நரம்பில் செருகி இருந்த குழாயில் ஊசி மருந்தை செலுத்தி, அதன்பின் குளுக்கோஸ் டியூபை மீண்டும் செருகிச் சென்றாள். கைகளிலிருந்து டியூபிற்குள் சென்ற இரத்தம் மெல்லக் கரைந்து, நிறமற்றதானது. 

நதியா தன்னிடமிருந்த துர்காவின் கைப்பையையும், அலைபேசியையும் அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றாள். செல்லும் முன் துர்கா குழந்தையின் உச்சி நுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டாள். அவர்கள் சென்று நெடுநேரம் ஆன பின்பும் அந்த அறைமுழுதும் குழந்தையின் வாசனை நிறைந்திருந்தது.


(வாசனை-2*)

Comments

Popular posts from this blog

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 3

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 4"